செவ்வாய், 10 ஜூலை, 2012

அவனும் நானும்


அவனை எனக்கு பிடிப்பதே இல்லை
அகிம்சை அடிக்கடி படித்ததால் எப்போதாவது தான் 
அவனை அடிக்கத் தோன்றுகிறது

அவன் 
எல்லாம் தெரிந்தவன் போல பேசுகிறான் 
எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு சொல்கிறான்
எல்லாப் பெண்களும் வேண்டும் என்கிறான் 

 பிடிக்காதவர்கள் போன்றே 
அவன் என்னை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறான் 
அவன் என்னை எப்போதும் கவனிக்காதது போல நடிக்கிறான் 
அவன் என்னை எப்போது பார்த்தாலும் முகம் இறுக்குகிறான் 

அன்று 
அவன் எப்போதும் போல வேடமணிந்து வந்தான் 
அவன் வேடம் கலைத்தார் பூட்டை உடைத்து 
அவன் வேடம் கலைந்து நிர்வாணமாய் நின்றான் 

தன் நிர்வாணத்தை அவன் 
பார்த்தது அது தான் முதல் முறை 
பார்த்ததும் பயந்தான் அதிர்ந்தான் 
பார்த்திட மறுத்தான் எதிர்த்தான்

அவன்
ஒருவன் போலத்தான் தூரத்தில் தெரிகிறான்
ஒன்று பத்து நூறு ஆயிரம் தலைகள் அவனுக்கு
ஒவ்வொரு வாயாலும் ஆயிரம் சொல்கிறான்

முன்னர் 
அவன் நானாக வாழ்ந்து வந்தான் 
அவன் என்னை மறைத்து வந்தான் 
அவன் நான் என்று வாழ்ந்து வந்தேன் 

இன்று
அவன் நானென்று வாழ்ந்து வருகிறான் 
அவன் நானில்லை என்று நம்புகிறேன் 
அவனும் நானென்று வாழ்ந்து வருகிறேன் 

அவனை எனக்கு பிடிப்பதே இல்லை 
அவன் போவானென்று அவர் சொன்னார் 
அவன் போக கால் பார்த்தேன் கண் பார்க்கிறேன் 

வெள்ளி, 6 ஜூலை, 2012

வானத்தில் தேடல்

இறையைத் தேடித் பார்க்கிறான் பிச்சை கேட்டு கெஞ்சவே
உலகம் தேடிப் பார்க்கிறான் அழிந்த பின்னர் வாழவே
தொலைத்துத் தேடித் பார்க்கிறான் மெய்ஞானம் மேலேயே
என்னை தேடிப் பார்க்கிறேன் என்னை நானும் உணரவே

ஒன்று வந்த போது அங்கு பலவும் காண இல்லையே
ஒன்று போன பின்னே அங்கு பலவும் காண இருந்ததே
ஒன்று நமக்கு போதுமா பலவும் எதுக்கு வேண்டுமா
ஒன்றும் வேண்டும் பலவும் வேண்டும் என்றுமிங்கு வாழவே

பலவும் அங்கே ஒளிருதே உடுக்கள் மட்டும் ஒளிருதா
வந்தகல்லு எரியுமே தூமகேது நகருமே  மின்னாது கிரகமே
இங்கு ஒன்று பெரிசுதான் அங்கு பலதில் ஒன்று தான்
நட்சத்திரம் ஒவ்வொன்றுமே தனித்தனியே சூரியனாம்

ஒரு உடலில் இருக்குதாம் கோடிகோடி செல்கள்தான்
ஒவ்வொரு செல்லுமே பிறந்து வாழ்ந்து இறக்குதாம்
கோடி உடல்கள் கோடி உயிர்கள் செய்யுதெந்தன் ஒரு உடல்
கோடி உடுக்கள் கோடி உயிர்கள் செய்வதுதான் யார் உடல்

இறையைத் தேடி பார்க்கலை பிச்சை கேட்டு கெஞ்சலை
வேறுலகம் தேடலை அழிவையும் தான் நம்பலை
தொலைந்து தேடி பார்க்கலை மேலே எதுவும் தேடலை
அண்டம் தேடி பார்க்கிறேன் பிண்டத்திலே தினம்தினம்