ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இறைவனுடன் ஒரு மாலை

வண்டி நிறுத்த தெரியாதவனெல்லாம் 
காசிருக்குன்னு வண்டி வாங்கி 
ஓட்டிக்கிட்டும் வந்துடுறாங்க வெட்டிபசங்க 

எதுக்கு இத்தனை கடைகள் இங்க 
எல்லாம் விலை ஏத்தி விற்கும் ஏமாற்றுக்காரர்கள்  

வீட்டுகிட்ட தேங்காய் பழம் விலை கம்மி 
அங்க வாங்கி வாங்கி வர மறந்து 
இங்க வாங்கி விரயம் செய்கிறாள் அறிவுகெட்டவள்   

நுழையும் போதே கை நீட்டுறாங்க 
வந்த வேலையைவிட்டு பிச்சை போடவா முடியும் 

செருப்பைத்தான் இங்க விடுகிறேனே 
காசையும் ஏன் இப்பவே கேட்கிறான் 
அதுவும் எழுதியிருப்பதை விட அதிகமாக 

சீட்டு வாங்கி செல்லும்படி ஒரு பதாகை 
இங்கு எல்லாத்துக்கும் ஒரு விலை 

அவனுக்கு மட்டும் ஏன் மாலை போடுறான் 
எனக்கு ஒரு பூ கூட தரவில்லை 
எல்லாம் பதவியும் வசதியும் செய்யும் வேலை 

அவளை திரும்பி திரும்பி பார்த்தேன் 
அந்த சாதிக்கு மட்டும் எப்படி இப்படி அழகு 

அவள் கூட வந்தவன் ஏன் இப்படி பட்டுகிட்டே நடக்கிறான் 
அவன்கையில் இருக்கும் குழந்தை விளையாடிகிட்டே இருக்கு 
இப்படியா வளர்ப்பாங்க பெத்துக்கமட்டும்தான் தெரியும்போல 

தாயார் அலங்காரம் அருமை என்றாள் 
இதுக்கா கோவிலுக்கு வந்தாய் என்றேன் 

புறா பூனை எல்லாம் ஏன் இங்கே கொல்லாமல் விட்டாங்க 
வெளிய வரும்போது பிச்சைபோட்டால் புண்ணியம் போகுமாம் 
நிம்மதியா சாமிகும்பிட முடியுதா இங்க 

வீட்டுக்கு வந்து யோசிச்சு பார்த்தால் 
சிலையாக இறைவன் சிரித்த மாதிரி நினைவு 
என்னைப் பார்த்து சிரித்திருப்பானோ 
கோவிலுக்கு வந்தும் கடவுளை அனுபவிக்காமல் போனதற்கா 
உலகத்துக்கு வந்தும் வாழ்வை அனுபவிக்காமல் போவதற்கா 

என்னைப் பாத்து சிரிச்சா அவனேல்லாம் ஒரு  கடவுளா 
கடவுளே இல்லன்னு அறிவாளி மாதிரி ஒருத்தன் சொன்னான்

நான் எப்பவுமே சரி 

செவ்வாய், 10 ஜூலை, 2012

அவனும் நானும்


அவனை எனக்கு பிடிப்பதே இல்லை
அகிம்சை அடிக்கடி படித்ததால் எப்போதாவது தான் 
அவனை அடிக்கத் தோன்றுகிறது

அவன் 
எல்லாம் தெரிந்தவன் போல பேசுகிறான் 
எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு சொல்கிறான்
எல்லாப் பெண்களும் வேண்டும் என்கிறான் 

 பிடிக்காதவர்கள் போன்றே 
அவன் என்னை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறான் 
அவன் என்னை எப்போதும் கவனிக்காதது போல நடிக்கிறான் 
அவன் என்னை எப்போது பார்த்தாலும் முகம் இறுக்குகிறான் 

அன்று 
அவன் எப்போதும் போல வேடமணிந்து வந்தான் 
அவன் வேடம் கலைத்தார் பூட்டை உடைத்து 
அவன் வேடம் கலைந்து நிர்வாணமாய் நின்றான் 

தன் நிர்வாணத்தை அவன் 
பார்த்தது அது தான் முதல் முறை 
பார்த்ததும் பயந்தான் அதிர்ந்தான் 
பார்த்திட மறுத்தான் எதிர்த்தான்

அவன்
ஒருவன் போலத்தான் தூரத்தில் தெரிகிறான்
ஒன்று பத்து நூறு ஆயிரம் தலைகள் அவனுக்கு
ஒவ்வொரு வாயாலும் ஆயிரம் சொல்கிறான்

முன்னர் 
அவன் நானாக வாழ்ந்து வந்தான் 
அவன் என்னை மறைத்து வந்தான் 
அவன் நான் என்று வாழ்ந்து வந்தேன் 

இன்று
அவன் நானென்று வாழ்ந்து வருகிறான் 
அவன் நானில்லை என்று நம்புகிறேன் 
அவனும் நானென்று வாழ்ந்து வருகிறேன் 

அவனை எனக்கு பிடிப்பதே இல்லை 
அவன் போவானென்று அவர் சொன்னார் 
அவன் போக கால் பார்த்தேன் கண் பார்க்கிறேன் 

வெள்ளி, 6 ஜூலை, 2012

வானத்தில் தேடல்

இறையைத் தேடித் பார்க்கிறான் பிச்சை கேட்டு கெஞ்சவே
உலகம் தேடிப் பார்க்கிறான் அழிந்த பின்னர் வாழவே
தொலைத்துத் தேடித் பார்க்கிறான் மெய்ஞானம் மேலேயே
என்னை தேடிப் பார்க்கிறேன் என்னை நானும் உணரவே

ஒன்று வந்த போது அங்கு பலவும் காண இல்லையே
ஒன்று போன பின்னே அங்கு பலவும் காண இருந்ததே
ஒன்று நமக்கு போதுமா பலவும் எதுக்கு வேண்டுமா
ஒன்றும் வேண்டும் பலவும் வேண்டும் என்றுமிங்கு வாழவே

பலவும் அங்கே ஒளிருதே உடுக்கள் மட்டும் ஒளிருதா
வந்தகல்லு எரியுமே தூமகேது நகருமே  மின்னாது கிரகமே
இங்கு ஒன்று பெரிசுதான் அங்கு பலதில் ஒன்று தான்
நட்சத்திரம் ஒவ்வொன்றுமே தனித்தனியே சூரியனாம்

ஒரு உடலில் இருக்குதாம் கோடிகோடி செல்கள்தான்
ஒவ்வொரு செல்லுமே பிறந்து வாழ்ந்து இறக்குதாம்
கோடி உடல்கள் கோடி உயிர்கள் செய்யுதெந்தன் ஒரு உடல்
கோடி உடுக்கள் கோடி உயிர்கள் செய்வதுதான் யார் உடல்

இறையைத் தேடி பார்க்கலை பிச்சை கேட்டு கெஞ்சலை
வேறுலகம் தேடலை அழிவையும் தான் நம்பலை
தொலைந்து தேடி பார்க்கலை மேலே எதுவும் தேடலை
அண்டம் தேடி பார்க்கிறேன் பிண்டத்திலே தினம்தினம்