ஞாயிறு, 30 மார்ச், 2014

மீண்டும் வா


நான் கேட்டா நீ தந்தாய்
நீயாக தான் தந்தாய்
உயிர் தந்தாய் உடல் தந்தாய்
உணர்வினையும் ஏன் தந்தாய்

நான் பார்த்த இடம் தானே
இங்கேயே இருக்கிறதே
நான் போகும் போதெல்லாம்
எங்கேயோ மறைந்தாயே

விளையாட்டு பொருளாக
உனை நானும் பார்த்தேனே
மற்றவரோ பக்தியுடன்
உனை பயந்து பார்த்தாரே

விளையாடத் தான் வந்தாய்
விளையாட வைத்தாயே
மறைபொருளாய் ஏன் ஆனாய்
மறந்தாயோ எனைத் தானே

உருகி உன்னை அழைத்தவரோ
காத்துத் தான் நிற்கின்றார்
உனை முதலில் நினைத்ததுமே
காற்றினிலே வந்தாயே

கால் பார்த்து நின்றேனே
கை பார்த்து அசைந்தேனே
கண் பார்த்து கரைந்தேனே
குரல் கேட்டு அழுதேனே

எல்லாமே நீயாக
பார்க்கத்தான் நினைக்கின்றேன்
எல்லாமே நீயாக
தெரியும் நாள் எந்நாளோ

எங்கே நான் தேடிடுவேன்
எப்படி நான் தேடிடுவேன்
என்னுள்ளே தேடுகிறேன்
என் வெளியில் இருப்பாயோ

உனை நானும் சரணடைந்தால்
ஓடோடி வருவாயோ
உனைத்  தேடி அலைகின்றேன்
உனைத்  தேடி தொலைகின்றேன்

உன் அன்பு உண்மையென்றால்
எனைத் தேடி தருவாயோ
என் காலில் நிலைக்கின்றேன்
உன் விருப்பம் வந்தால் வா