செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

எங்கள் நவரசக் காதல் வாழ்வு


நான் காதல் ஜுரம் வந்து தவிக்கையிலே 
நெற்றி தொட்ட நண்பரெல்லாம் நகைக்கையிலே 
நெஞ்சு தொட்ட ஒருத்தி மட்டும் நின்றாளே 


அம்மா அப்பா சொன்னதெல்லாம் குற்றமாக 
அவள் நினைத்து அப்பப்போ அழுகையிலே 
அக்கண்ணீர் துடைக்கும் ஒரே விரலானேன் 


உள்ளங்கள் இணைந்ததென எங்க எண்ணம் 
உடல்பசி அலைதலென சிலர் இழிக்க 
உள்ளே நொறுங்கி நெருங்கலானோம் 


கூடவே இருந்து வந்த நண்பர் சிலர் 
காதலுக்கு குழிபறிக்க மிரண்டு போனோம் 
கடவுளே சாட்சி என கோவில் போனோம் 


திருமணத்தோடு முடிய இது காதல்படமா 
சீர்வரா திருமணத்தால் செலவு அச்சம் 
சிலகாலம் வசதியின்றி வாழ்ந்திருந்தோம் 


கல்யாணம் முடிந்தபின்னே சேரவந்த இரு 
குடும்ப நடத்தையாலே கோபம் கொண்டோம் 
கொண்டவரே போதுமென்று மீண்டும் போனோம் 


கோபம்வரா கணவனென குறிப்பறியும் மனைவியென 
கண்ணுவைச்ச போதெல்லாம் கர்வம் கொண்டோம் 
குழந்தை போல வாழ்ந்து வந்தோம் உள்ளுக்குள்ளே 


காதலுக்கு பரிசாய் வீட்டில் மழலையாச்சு 
குழந்தையோடு குழந்தை சேர உவகையாச்சு 
குடும்பம் கடமை வாழ்விலிப்போ குறியுமாச்சு 


தனிமரமாய் தோன்றி வந்த வாழ்க்கையுமே 
தோப்பாச்சு வீசுதிப்போ அமைதித்தேன்றல் 
தொடருதிப்போ கவிதையாக எங்கள் வாழ்வு