சனி, 30 ஆகஸ்ட், 2014

குழந்தைத்தனம்

குழந்தையாய் இருந்தபோது
குழந்தை போல நடித்துக்கொண்டே
கொஞ்சினர் பெரியவர்கள் அறியாக்காலம்

குழந்தையாய் இருந்தபோது
பெரியவன் போல நடக்கச் சொல்லி 
குழந்தைத்தனம் கொல்லப் பார்த்த கெட்ட காலம் 

பெரியவன் போல நடக்கும் போது 
குழந்தை தான் நீயென்று 
குறுக்கினர் பெரியவர்கள் பொல்லாக்காலம் 

குழந்தைதனம் விட்டுப்போக 
பெரியத்தனம் எட்டி நிற்க 
பெரியவன் போல் சுற்றியது விடலைக்காலம் 

பெரியவன் போல நானும் காட்ட 
குழந்தைத்தனம் என ரசித்து 
காதல் சொன்னாள் ஒரு குளிர்காலம் 

என் குழந்தைத்தனம் ரசிக்கப்பட 
அவள் குழந்தைத்தனம் ரசித்தபடி 
முன்பனியில் சுற்றியது காதல் காலம் 

குழந்தை போல நடக்காதே 
சூழல் நம்மை பிரிக்குதென்றாள் 
காரணம் விளங்காத விடியற்காலம் 

இந்தத்தனம் சிறந்ததென அந்தத்தனம் சிறந்ததென 
இந்தக்கண வாழ்வறியா பலரும் சொல்ல 
சுயம்புவாக குழந்தைத்தனம் கொண்டதொரு ஞானக்காலம் 

 (தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - விரும்பிய தலைப்பிற்கு எழுதியது )

காத்திருக்கும் பூவே





காத்திருப்பாய் என்று தெரியும் என் அழைப்பால்
பூத்திருப்பாய் என்று தெரியும் என் நினைப்பால்
மலர் கோர்த்து காத்திருப்பாய் நான் வந்து சூட
மலர் சேர்ந்து மெய்வளர்ந்தாய்  நான் வந்து கூட
என்னால் அகம் முகம் மலரும் மலர் நீ
என்னை ஒளி தந்து வளர்த்தும் தழல் நீ
நிலவு வரும் நேரமாச்சு பதைக்கிறேன் நானே
உலகமெலாம் தடைசெய்தும் வருவேன் நானே

நிலைகுலைந்து நடந்திருந்தேன் வாழ்வு தாழ
தலைகுனிந்து காத்திருந்தேன் வாழ்வு வாழ
மனிதம் உதவாதென்று வெறுத்துப் போனேன்
புனிதம் காக்குமென்று நம்பிப்  போனேன்
காத்து நின்றோம் அம்மன் கோவில் திரைவிலக
பூத்துநின்றாய் மாலையில் எனது தலைநிமிர
கண்பார்த்ததும் உன்பார்வை என் விருப்பமாக
கண்கள் சேர்ந்தன என் வாழ்வின்  திருப்பமாக

உன்னை சேர்தலே முடிவென்று நினைத்திருந்தேன்
உன்னை சேர்தலே துவக்கமென்று பிறகுணர்ந்தேன்
உணர்வால் எனை நிமிர்த்தி நிற்க வைத்தாய்
உலகை நேராய்  நீ எனை பார்க்க வைத்தாய்
உறவாலே எதிர்காலம் நிலைக்க வைத்தாய்
உறவிற்கு உழைத்திட நினைக்க வைத்தாய்
காத்திரு கண்ணே வந்து நிற்பேன் மனம் மகிழ
பார்த்திரு பெண்ணே உயர்ந்து நிற்பேன் மனம் நெகிழ

 (தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - கொடுக்கப்பட்ட படத்திற்கு எழுதியது )

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மழை

பேரொலிகள் முழங்க மின்னொளிகள் வீச
பூரணமாய் நான் புனித நீராட

பரிதாபமாய் சிலர் குடைகளுள்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மாயை

அனுபவ விழைவாக
அழைத்திடும் உடுவாக
மறுபுல மழையாக
மண்ணுள் புதையலாக
என்முன் வந்தது

அனுபவம் புதிதாக
இதந்தரு நிலவாக
வறட்சிக்கு நீராக
வயலுக்கு உரமாக
என்னிடம் சேர்ந்தது

அனுபவம் பழக்கமாக
கூசிடும் வெயிலாக
கடலின் அலையாக
தோப்பில் பாறையாக
என்னுடன் இருந்தது

அனுபவம் பதியாமல் 
மறைந்த எரிகல்லாக
கடலில் மழையாக
கண்ணில் மணலாக
என்னைவிட்டு போனது

அனுபவம் போதுமென
நிறம் மாறும் வானாக
வற்றாத ஊற்றாக
தாங்கும் நிலமாக
என்னில் நானே நின்றது 

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஏன்

ஏன் உன் மௌனத்தை அழைத்தே கெடுத்தேன்
ஏன் உன்னிடம் எதையாவது கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் உன்னை பார்க்கும் போதெல்லாம் புலம்பினேன் 

ஏன் நீ செய்ய பட்டியல் போட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் நீ செய்யாதவற்றிற்கு ஏமாந்து அழுதேன்
ஏன் நீ காட்டிய பாதையில் செல்லாமல் இருந்தேன்

ஏன் எனக்கு நீ கற்றுத் தந்தவற்றை மறந்தேன்
ஏன் எனக்கு நீ நிகழ்த்திய அற்புதங்களை மறந்தேன்
ஏன் எனக்கு நீ தந்த வாழ்க்கையை மறந்தேன்

ஏன் நான் உன் மீது கோபம் வளர்த்தேன்
ஏன் நான் உன் அண்மை போனதென நினைத்தேன்
ஏன் நான் உன் சொல்கேட்கும் அமைதி இழந்தேன்

என் புண்ணியமோ பாக்கியமோ
என்னை மன்னித்துக் கொண்டேயிருக்கிறாய்
என் நன்றிகளே இனி என் உணர்வுகள்  

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

காட்சி தா

எல்லாம் ஒன்றென நூல்கள் சொல்லும்
என்றும் எனதென அறிவும் சொல்லும்
எல்லாம் நீயென  இதயம் சொல்லும்
என்றும் காட்சிக்கு மனமோ ஏங்கும்

என்மீது விழும்போது மழையாகிறாய்
என்பாதம் ரசித்திடும் பனியாகிறாய்
இமைமீறி தெரிந்திடும் ஓளியாகிறாய்
என்கண்கள் தேடிடும் மீனாகிறாய்

என்னிருளை விரட்டிவிடும் விளக்காகினாய்
என்விளக்கில் எரிகின்ற நெய்யாகினாய்
என் நெய்யை எரிக்கின்ற திரியாகினாய்
என்திரியை தூண்டிவிடும் விரலாகினாய்

என்மனதில் எப்போதும் உன் நினைவானது
என்னிதயம் எப்போதும் உன் இடமானது
என்பயணம் எப்போதும் உன் வழியானது
என்விழியில் எழுந்தருள் ஊர்வலத்திலாவது


புதன், 6 ஆகஸ்ட், 2014

நீ

இசைத்தெழுப்பும் குயிலும் நீ
இருள்நீக்கும் கதிரும் நீ
மனம் உருக்கும் பனியும் நீ
மனம் மலர்த்தும் மலரும் நீ

கால்  போகும் பாதையும் நீ
வியர்க்க வைக்கும் வெயிலும் நீ
சிலிர்க்க வைக்கும் காற்றும் நீ
அயர்ச்சி போக்கும் இளநீரும் நீ

முதலில் தோன்றும் தாரா நீ
மேல்கீழ் வான சிகப்பும் நீ
மயக்கும் மண மலரும் நீ
மெய் தேடும் ஓய்வும் நீ

வழி காட்டும் நிலவும் நீ
வழி சேரும் இடமும் நீ
நான் சாயும் மடியும் நீ
நான் மறக்கும் தூக்கம் நீ 

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தூங்காத தூக்கம்

தூக்கம் வர மறுக்கிறதே
தூங்கும் வழி மறக்கிறதே
தேடும் மனம் தூங்கிடுமோ
சோர்ந்த உடல் சாய்ந்திடுமோ

தாய் மடியில் தூங்கினேனே
தாலாட்டில் தூங்கினேனே
தந்தை கண்ணில் தூங்கினேனே
தட்டித் தர தூங்கினேனே

அயர்ந்து நான் தூங்கினேனே
பயந்தும் நான் தூங்கினேனே
கனவு காண தூங்கினேனே
நினைவு போக தூங்கினேனே

தேடும் போதும் தூங்கினேனே
சேர்ந்து நானும் தூங்கினேனே
என்னில் உன்னை தொலைத்தேனே
இனி எப்போது தூங்குவேனோ