ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஒவ்வொருவரும் எண்ணுகிறார்

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வதாக எண்ணுகிறார்

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வை
ஆழ்ந்து அனுபவிப்பதாக
அனுபவித்து அறிந்ததாக
அறிந்து வாழ்வதாக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வில்
சரியான முடிவெடுப்பதாக
முடிவெடுப்பது பிறருக்கென
பிறருக்கு உழைப்பதாக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வின்
பாடங்களை படித்ததாக
அர்த்தம் புரிந்ததாக
இன்பக்கரை கண்டதாக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரின்
வலிகள் புரிந்தவராக
வலியின் காரணம் தெரிந்தவராக
காரணத்தின் நியாயம் உணர்ந்தவராக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவருக்கு
எது தேவை என்றறிந்தவராக
எது பாடம் என்றுணர்த்துபவராக
எது அன்பு என்று காட்டுபவராக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரால்
ஏமாற்றப்படுவதாக
துன்பப்படுவதாக
ஞானம் அடைவதாக

சிலர் மட்டும் தான் சும்மா இருந்து
எண்ணங்கள் உயர்த்துமென்றும்
எண்ணங்கள் தாழ்த்துமென்றும்
வாழ்வை மறைக்குமென்றும்  

வியாழன், 29 செப்டம்பர், 2011

அறியும் மெய்



இத்தனை பேர் இங்கெதற்கு 
ஏன் இந்த கூச்சல் குழப்பம் 

பதிலில்லா கேள்விகள் அசைபட 
பதிவான நிகழ்வுகள் அரைபட 

வார்த்தைக்கொரு உணர்வு வெளிப்பட
வாழ்க்கை முன்னும்பின்னும் அலைந்திட 

கனவுகள் நிறைந்த அந்த இன்பக்காலம் 
கடவுளை வேண்டல் மட்டும் துன்பக்காலம் 

ஆயத்தங்களையும் பாவனைகளையும் 
வாழ்வு என்றே மனம் ஏற்கிறது 

காலைக்குள் மாற்ற ஒன்றுமில்லை 
கண்மூடி கிடந்தாலும் தூக்கமில்லை 

தாகமோவென தண்ணீர் குடித்து 
சந்தேகத்திற்கு மீண்டும் கழித்து 

அசையாது பிணம்போல கிடந்து பார்த்து 
ஐம்பதிலிருந்து ஒன்று எண்ணிப்பார்த்து 

தள்ளி குப்பற மல்லாக்க சாய்ந்து 
தலையணை தலைகால் இடம் மாற்றி 

ஆயத்தங்களையும் பாவனைகளையும் 
தூக்கம் என்று உடல் ஏற்பதில்லை 

சனி, 24 செப்டம்பர், 2011

எப்பவுமே இப்படித்தான்


நினைவு தெரிஞ்சபோதிருந்து இருக்குது 
நினைப்பெல்லாம் அதுவேதான் நடத்துது 
போற இடம் தெரியாம போகுது 
பயணமுன்னு தெரியாம நடக்குது 

புதுப்பாதை பார்த்தாலே வியக்குது 
பழையபாதை மாறாம நடக்குது 
போகும்போது விளக்குகளை பார்க்குது 
பாதையிலே வெளிச்சமில்லை தவிக்குது 

விழும்போது பறப்பதாக நினைக்குது 
விழாட்டியும் வலிப்பதாக சொல்லுது 
வழிகாட்டி எங்கேன்னு தேடுது 
வழிகாட்டி நானேன்னும் சொல்லுது 

எவர்வந்து சொன்னாலும் வாங்குது 
எதுக்குன்னு தெரியாம குழம்புது 
நல்லதுன்னு பார்த்ததுமே சொல்லுது 
நின்னு பார்த்து தப்புன்னும் சொல்லுது 

கொஞ்சினால் குழந்தையாக ஆகுது 
கொஞ்சும்போது தாயாக மாறுது 
கரையும்போது கண்ணீரை தள்ளுது 
கல்லாகி கொல்லவும்தான் செய்யுது 

இல்லாம போகணுன்னு நினைக்குது 
இல்லாமை இல்லேன்னும் சொல்லுது 
முழுசாக போகாம கொஞ்சம் நின்னு 
மிச்சமா தவிக்குமோன்னு தயங்குது 

பள்ளத்திலே நிக்குதுன்னு பதறுது 
பரபரன்னு சுத்திமுத்தி பார்க்குது 
கூட்டத்திலே தனியாத்தான் போகுது 
கீழெதுமேலெது தலைகீழ் மரத்திலே 

வியாழன், 22 செப்டம்பர், 2011

உன் இடத்தில் உன் கவிதை



கவிதை வழிந்த காகிதம்
காதல் மொழிந்த கவிதை
மனம் எழுந்த காதல்
மாலை விழுந்த மனம்
உடன் கழிந்த மாலை

கண்ணில் காட்டிய காதல்
கண்ணில் தெரிந்த நான்
கண்ணாடி காட்டாத மெருகு
கண்ணாடி பார்க்காத முருகு
கண்சாய்ப்பு பார்த்த நினைவு

தேடல் எல்லாம் நின்றது
ஊடல் சுகமாய் நின்றது
கூடல் மனதில் நின்றது
சாடல் சுற்றி நின்றது
வாடல் பிரிவில் நின்றது

கடன் நம்மை பிரித்ததே
கடல் நம்மை பிரித்ததே
பணம் நம்மை பிரித்ததே
வேலை நம்மை பிரித்ததே
விதி நம்மை பிரித்ததே

இரவு முழுதும் தூக்கமில்லை
போர்வை வாசம் இழக்கவில்லை
பகலில் கூட எழுவதில்லை
நட்பு இப்போ பழக்கமில்லை
அன்னை ஊட்டல் ருசிக்கவில்லை

நித்தம் கையில் காகிதம்
வரமாய் வந்த காகிதம்
வியர்வை பட்ட காகிதம்
கண்ணீர் விழுந்த காகிதம்
காதல் மொழிந்த காகிதம்

வியாழன், 15 செப்டம்பர், 2011

உடையும் நான்

சத்தமாக அழுதுகொண்டிருந்தது 
தாயின் கையிலிருந்த குழந்தை 
புன்னகையுடன் கொஞ்சும் தாய் 
புன்னகை பூக்குது எனக்கும் 
யாருடனோ புன்னகை பகிர்வதை 
யாரது தடுப்பது உள்ளிருந்து 

கதறி அழுதுகொண்டிருந்தது 
கையில் குழந்தையுடன் தாய் 
விறைத்துக் கொண்டிருக்கும் குழந்தை 
விளிம்பில் நிற்கும் என் கண்ணீர் 
யாருடனோ கண்ணீர் பகிர்வதை 
யாரது தடுப்பது உள்ளிருந்து 

கண்ணெதிரே சுகதுக்கம் பார்த்தால் 
கண்ணீரோடு பகிரசொல்வதா 
ஊர்முன்னே உணர்ச்சியின்றி உயரே 
உடையாது நிற்க வைப்பதா
இரண்டுமே நான்தானா 
இறுதியில் எதுதான் நான் 

இன்றும் காட்சி நிற்கிறது 
ஏழாம் மாதம் அவசரமாய் வந்துபோன 
ஒருமகனை கையிலேந்தி 
உடையாது நின்றிருந்தேன் 
மண்ணில் புதைக்குமுன்னே 
முதல்முத்தம் தரும்வரையில் 

திங்கள், 5 செப்டம்பர், 2011

காதல் விபாசனா

மூச்சையும் இதயத் துடிப்பையும்
கவனித்து நான் படுத்திருக்க

திரும்பிப் படுக்கவேண்டி
தூக்கத்திலும் கவனமாய் எனை நகர்த்த
நான் கண் திறந்து பார்க்க
கலைத்தேனோ தூக்கம் என நீ கேட்க
கலைந்தது தியானமென நான் சொல்ல
குழப்பமும் கலந்து நீ பார்க்க

மூச்சை கவனிப்பதொரு தியானதந்திரா
புத்தமதத்தில் அதன்பெயர் விபாசனா
காலையில் சொல்லவென மனதில் குறித்து

என்மூச்சும் துடிப்பும் கேட்க உனைத்திருப்பி
உள்ளங்கை காதும் விரல்நுனி கண்மூடும்
முத்திரை நான் பிடிக்க நீ மீண்டும் உறங்க

உயிரில் உயிர் கலந்ததென்ற
உன் மூச்சை கவனிப்பதே
நான் செய்யும் தவமாகும் 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

எங்கள் நவரசக் காதல் வாழ்வு


நான் காதல் ஜுரம் வந்து தவிக்கையிலே 
நெற்றி தொட்ட நண்பரெல்லாம் நகைக்கையிலே 
நெஞ்சு தொட்ட ஒருத்தி மட்டும் நின்றாளே 


அம்மா அப்பா சொன்னதெல்லாம் குற்றமாக 
அவள் நினைத்து அப்பப்போ அழுகையிலே 
அக்கண்ணீர் துடைக்கும் ஒரே விரலானேன் 


உள்ளங்கள் இணைந்ததென எங்க எண்ணம் 
உடல்பசி அலைதலென சிலர் இழிக்க 
உள்ளே நொறுங்கி நெருங்கலானோம் 


கூடவே இருந்து வந்த நண்பர் சிலர் 
காதலுக்கு குழிபறிக்க மிரண்டு போனோம் 
கடவுளே சாட்சி என கோவில் போனோம் 


திருமணத்தோடு முடிய இது காதல்படமா 
சீர்வரா திருமணத்தால் செலவு அச்சம் 
சிலகாலம் வசதியின்றி வாழ்ந்திருந்தோம் 


கல்யாணம் முடிந்தபின்னே சேரவந்த இரு 
குடும்ப நடத்தையாலே கோபம் கொண்டோம் 
கொண்டவரே போதுமென்று மீண்டும் போனோம் 


கோபம்வரா கணவனென குறிப்பறியும் மனைவியென 
கண்ணுவைச்ச போதெல்லாம் கர்வம் கொண்டோம் 
குழந்தை போல வாழ்ந்து வந்தோம் உள்ளுக்குள்ளே 


காதலுக்கு பரிசாய் வீட்டில் மழலையாச்சு 
குழந்தையோடு குழந்தை சேர உவகையாச்சு 
குடும்பம் கடமை வாழ்விலிப்போ குறியுமாச்சு 


தனிமரமாய் தோன்றி வந்த வாழ்க்கையுமே 
தோப்பாச்சு வீசுதிப்போ அமைதித்தேன்றல் 
தொடருதிப்போ கவிதையாக எங்கள் வாழ்வு

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மெரீனா கவிதைகள்

கரையில் கரையுது காகமதன்
கரைதலை கரைத்து ஓங்கும்
கரையில் மோதும் அலைகள்

மணலை தள்ளவந்த நண்டு
பயத்தில் நிற்குது உறைந்து
நகரும் என்னைப் பார்த்து

அசையாது நின்ற போதும்
நண்டு பார்க்குது பயந்து
ஆடைகளை ஆட்டுது காற்று

சிறுவர் பெண்கள் விரும்பிடும்
சதையிழந்த பிணங்கள் அழகு
சங்கு சிப்பி ஓடுகள்

எனைப் பார்த்து அலையாட
அலை பார்த்து நானாட
சிறுவயது நட்பெமக்குள்

மோகம் கொண்டு வந்தவனை
முறைக்க வைக்கும் ஏக்கப்பார்வை
முறுக்கு சுண்டல் பெட்டியுடன்

ஓய்வெடுத்து நிற்கையிலும்
ஒதுங்குவோர்க்கு உதவிடுமே
ஓரம் நிற்கும் படகுகள்

முன்னே மாதிரி இல்லையின்னு
முனகிகிட்டே இருந்தாலும்
மிளகாய் பஜ்ஜி திங்கணுமே

குழந்தையாய் கூட்டி வந்தோம்
குழந்தையாய் தான் ஆடி வந்தான்
கட்டிக் கிடந்தோரை பார்க்கும் வரை

வேடிக்கை வேறு காட்டியும்
விடாது பார்த்திருந்தான்
விரகம் கொண்ட ஜோடியினை

காதலிதுவென கொள்வானோ
குழம்புவானோவென குழம்புகையில்
காவலர் வந்தார் இவர் பிரிந்தார்

குட்டைகுதிரை பட்டம் பொம்மை
குச்சி ஐஸ் மாங்காய் பத்தை
குழந்தையாய் மீண்டும் மாற்றும்

ஒரேபொருளினை எத்தனைபேர் விற்கின்றார்
ஒரேபொருளினை எத்தனைவிதமாய் விற்கின்றார்
அத்தனை பேரிடமும் வாங்க வரும் ஆளுண்டு

ஆடைகளை மடித்துக் கட்டி
ஓடி தப்பப் பார்க்கின்றார்
அலைவென்றதும் மகிழ்கிறார்

என்ன தான் தட்டினாலும்
என்ன தான் உதறினாலும்
என்வீடு வந்துசேரும் மணல்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஆத்திகம் விற்போர்

தாத்தா படங்காட்டி தினந்தினம் மருந்துவிற்கும்
தெரியாத மருத்துவனும் தெளிவாக தெரிந்திருக்கான்
குழந்தைப் பேறுக்கும் குறைவான ஆண்மைக்கும்
குணமாக்கும் மருந்தேனவே கூவிவித்தால் கோடிவரும்
வசூலை தந்திடாத வியாதிகள் பல இருக்கும்
வியாபாரம் குறையட்டும் விரைவீக்கம் மூலமுண்டு

சொந்தப் படங்காட்டி தெம்பு விற்கும் கூட்டமுண்டு
தெரியாத மனம்மறைத் தரிதார முகங்காட்டும்
கோடீசுவரன் தொப்பையையும் குற்றவுணர்வு குப்பையையும்
களையுமிந்த பயிற்சி என்று கூறினாலே கொடியுண்டு
பெரிய ஆளு சிக்காட்டியும் பணம்பண்ண வழியுமுண்டு
பத்துப்பத்து ரூபாயா லட்சம் பேரிடம் வசூலுண்டு

பிள்ளைகள் இல்லா நேரம் பள்ளியிலே கூட்டம் போடும்
பிரசினை உள்ளவனாய் பாத்துபாத்து புடிச்சி போடும்
கடவுள் வருவான்னும் கேட்டால் பதில் சொல்லும்முன்னும்
கடவுளின் தூதனென்றும் கடவுளே தானென்றும்
பணங்கொடு கடவுளுக்கு பிள்ளை மதிப்பெண் கூடுமுன்னும்
பாவம் போகும் பணம் பெருகுன்னு சொர்க்கத்தில் இடம் விற்கும்


செவ்வாய், 26 ஜூலை, 2011

நாத்திக மதம்

கடவுள் படைக்கப்பட்ட போதே நாத்திகன் பிறந்து விட்டான் 

யுகயுகமாய் அவதாரமெடுத்தபோதும்
நாத்திகத்தை அழிக்கவில்லை 
ராமனும் மரியாதையாக 
நாத்திக அந்தணன் என்றான் 

ராமன் காட்டில் வாடும்போது 
நாட்டில் நாத்திகன் வாழ்ந்திருந்தான் 
ராமன் கடவுள் ஆகும்முன்னே 
கடவுள் இல்லை என்றிருந்தான் 

நானும் கூட சில காலம் 
நாத்திகனாய் வாழ்ந்திருந்தும் 
அடையாள சட்டை போட்டு 
அலைந்ததில்லை ஊருக்குள்ளே 

பிறமொழி நாத்திகர்கள் 
பற்றி எனக்கேதும் தெரியாது 
நம்மூரு நாத்திகர்களுடன் 
நல்ல பழக்கமுண்டு 

நாத்திகம் என்றொரு மதமுண்டு 

ஆத்திகனாய் பிறந்துபின் 
நாத்திகனாய் சிலகாலமேனும் 
வாழாதிருப்பவன் பெற்றோரால் 
மூளைசலவையாகி சிந்தியாதவனே 

நாத்திகனாய் பிறந்துபின் 
ஆத்திகனாய் சிலகாலமேனும் 
வாழாதிருப்பவன் பெற்றோரால் 
மூளைசலவையாகி சிந்தியாதவனே 

மத அடையாளம் காட்டும்வண்ணம் 
வண்ண ஆடை உடுத்துவார்கள் 
ராமஜெயம் போல இறந்த தலைவர் 
வாழ்கவென்று கூவி கூடுவார்கள் 

நாத்திக மதத்தில் குருக்களுண்டு மடங்களுண்டு 

உருவாக்கிய தலைவருடன் கூட 
அடுத்த நிலை தலைவர்களையும் 
இருந்தாலும் இறந்தாலும் 
மாலையிட்டு வணங்கிடுவர் 

பிறந்த இறந்த நாள்பார்த்து 
கூட்டம் கூடி ஊர்வலம் போய்
ஊரூராய் திருவிழா நடத்தி 
பக்தரெல்லாம் மகிழ்ந்திருப்பார் 

ஊரூருக்கு மடங்களுண்டு 
ஒவ்வொன்றுக்கும் தலைவருண்டு 
அங்கங்கு சொத்துண்டு வசூலுண்டு
வீணாய் போகும் பக்தருண்டு 

திருமணம் நடத்திவைக்க 
தலைவர் வந்திருந்து அர்ச்சிப்பார் 
தன்மத புனிதர்களை போற்றியும் 
பிறமத புனிதர்களை தூற்றியும் 

நாத்திக மதத்தில் சாதியுண்டு மதமுமுண்டு 

நாத்திக மதத்திலும் 
சாதிசெத்து போவதில்லை
நாத்திக நாக்குகள் 
சாதி சொல்லா நாளுமில்லை 

நாத்திக மதத்திலும் 
உட்பிரிவுகள் பல உண்டு
உட்பிரிவுகளுக்குள் நித்தம் 
சண்டைகளும் வருவதுண்டு 

நாத்திக மதத்திலும் 
தலைவர் சொன்னது வேதமாகும்
அதை அறிந்தால் போதும்  
அனைத்தும் அறிந்தாற்போல் பேசித்திரிவதுண்டு

நாத்திக மதத்திலும் 
மதத் தீவிரவாதமுண்டு 
பிறரை எதிரியென நாவால் தாக்கிடுவர் 
கூட்டம் கூடி உடலாலும் தாக்கிடுவர்