வெள்ளி, 28 நவம்பர், 2008

முகங்கள்

எத்தனை முறைநான் எத்தனை முறைநான்

எந்தன் பிம்பம் பார்த்திருப்பேன்

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையும்

வெவ்வேறு முகமே தெரிகிறதே

எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்

என்னசல் முகம்தான் இதிலெதுவோ

ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு முகமும்

பிறர்க்கு செய்த முகந்தானே

ஒன்று உன் காலைக்கு ஒன்று உன் மாலைக்கு

ஒன்றுண்டு ஒவ்வொருவர் வேளைக்கும்

ஒன்று உன் உவப்பிற்கு ஒன்று உன் உவர்ப்பிற்கு

ஒன்றுண்டு ஒவ்வொருவர் உணர்விற்கும்

ஒன்று என் உழைப்பிற்கு ஒன்று என் பிழைப்பிற்கு

ஒன்றுண்டு ஒவ்வொரு தொடர்புக்கும்

மீண்டும் பிம்பம் பார்க்க மீண்டும் பிம்பம் பார்க்க

எனக்கென முகமே இருக்காதோ

நீயும் பிம்பம் பார் நீயும் பிம்பம் பார்

உன்முகம் சில நான் பார்த்திருக்கேன்

இந்த என்முகம் இந்த என்முகம்

பார்த்ததுமே நீ கரைந்திடுவாய்

அந்த என்முகம் அந்த என்முகம்

பார்த்ததுமே நீ உறைந்திடுவாய்

ஐயோ அந்தமுகம் ஐயோ இந்தமுகம்

காட்டவே மாட்டேன் நானுனக்கு

உனக்கு அந்தமுகம் உனக்கு இந்தமுகம்

அறிந்திடல்தான் உன்னை புரிந்திடலோ

உந்தன் அந்தமுகம் உந்தன் இந்தமுகம்

பிடித்திடல்தான் உறவு நிலைத்திடலோ

இது ஓருலகம் அது ஓருலகம்

இது பிறந்தது
அது பெற்றது
இது மூன்று
அது முப்பது
இது இளம்விரல்
அது கைகளில்
இது வளருது
அது வளர்க்குது

இது இளஞ்சாரல்
அது பெருங்காற்று
இது இட்டுச்செல்லும்
அது அன்பில்செல்லும்
இது அண்டிச்செல்லும்
அது அழைத்துச்செல்லும்
இது உயரப்போகும்
அது உருகிப்போகும்

இது கடிந்துக் கொள்ளும்
அது சிரித்துக் கொள்ளும்
இது மிரண்டு போகும்
அது மிரட்டிப் பார்க்கும்
இது கசங்கிப்போகும்
அது கசந்துப்பார்க்கும்
இது அதுவன்றி வாழும்
அது இதுவன்றி வாடும்

இது அப்போது
அது இப்போது
இது மலர்ந்தது
அது காய்க்குது
இது அதுவானது
அது இதுவாக்குது
இது பிறந்தது
அது பெற்றது

குமரி

வார்த்தையாலே உரைத்துப்பார்த்தேன்
வார்த்தை வெளுத்துப்போனதே
கவிதையாகக் கோர்த்துப்பார்த்தேன்
கருத்து வழுக்கிப்போனதே
எழுத்தினாலே சொல்லிப்பார்த்தேன்
ஏதும் விளங்கவில்லையே
மௌனமாகக் கேட்டுப்பார்த்தேன்
முகமலர்ந்தாள் குமரியே

சிலுவை

சாய்க்குமோ இதுவென்று
சிறுபிள்ளையாய் நானும்
சுமந்துதிரிந்த தாமிந்த
சிலுவையெனை அறையுமுன்னே
தேவனே இரட்சிப்பீர்

வியாழன், 27 நவம்பர், 2008

நிஷாவும் வெள்ளையனும்

நிஷா எங்களை எல்லாம் புரட்டி அடித்தது
வெள்ளையனைப் போல வேண்ட வைத்தது
மழையே போ போ வேறொரு நாள் வா வா

கழுதையும் நானும் வேற்றுமை ௭

வீட்டில் வரும் பிரச்சினைக்கு
சகோதரனை குண்டு வைத்து கொல்வேன்

கழுதையும் நானும் வேற்றுமை ௬

என் சகோதரன் மேல் கோபம் வந்தால்
எங்கள் தாயைப் பழிப்பேன்

புதன், 26 நவம்பர், 2008

அனைவருக்கும் சமமாய்

அவனுக்கு எதோ பிரச்சினை போல பாவம்
அவன் கேட்கும் முன்னமே தந்துவிட்டேன்
அவசரமாய் இலவச அறிவுரைகள்

தேசியகீத சந்தந்திற்கு எழுதியது

இறை நிறை வரை இமயம்முதல் இறையே
நில்தவம் செய்மண் வரையே
வாழ்விக்கும் தாயே திருநாடே இறையே
என தினம் போற்றிடு வோமே
இந்தியர் அனைவரும் ஒருதாய் மக்கள்
நாமிதை அறிவோம் நிஜமே
மதம் இனம் ஜாதி என்றே
பலப் பல நம்முள் பங்கும்
என்றும் இதை எதிர்ப்போமே
உழை உயிர் கூட்டினில் நின்றிடும் வரையே
பாரதம் காக்க உழைப்போம்
உழைப்போம் உயர்வோம் ஜெயிப்போம்
சரித் திரத் திலே நிலைப்போம்

நல்நட்புகள்

பல நாள் கழித்து நல்நட்புகள் உறவு
மறைத்தேன் முகத்தை அப்புறம் திருப்பி
துடைத்தேன் துளிர்த்த கண்ணீர் துளி

திங்கள், 24 நவம்பர், 2008

கவிதைக்கு நேரம்

அமெரிக்கக் கடன்காரன் டாலர் வைத்து ஏமாற்ற
அண்டிப் பிழைத்த எங்காளு நம்மூரில் ஆடிப்போக
வாய்த்தது எனக்கு கவிதை எழுத நேரம்

புதிய கறுப்பர்

அங்கே ஒரு கறுப்பர் ஆட்சியைப் பிடிக்க
நம்மாளு வென்றான் என நம்மாளு மகிழ
தான் கறுப்பன் எனப்புதிதாய் நினைக்கும் மேலடிமைகள்

ஞாயிறு, 23 நவம்பர், 2008

கூட்டுக்களி

அவரவர் விழைவு அவரவர் போதை அவரவர் கதை
மற்றவர்சொல் காதுள் நுழைந்தும் மனமடையாது
கூடிக்களித்ததாக மறுநாள் அயர்ச்சியில் நினைப்பு

சனி, 22 நவம்பர், 2008

பிரிவு

கடனும் லாபமும் சேர்த்து வளரும்
கணக்கொன்று வாய்த்து நித்தம்
நானெழுதி மகிழ்கையில் இந்த
நரர்க்கெல்லாம் ஏன் வருத்தம்

மற்றக் கடனெல்லாம் தனித்தனியே
மனதைக் கலக்கையிலே உன்னிடம்
பட்டக் கடன் வானைத் தாண்டியும்
பெருமிதம் தருவது ஏன் நித்தம்

எழுதி எழுதி கூட்டிக் கழித்து
எண்களில் குழம்பி காண்பார் லாபத்தை
காகிதத்தில் எண்களில் அடங்கா கணக்கை
கண்டதும் லாபமென்றது ஏன் சித்தம்

மொத்த ஏன்களுக்கும்
முழுதும் ஒருபதில்
மச்சம் என்கிறது
மச்ச சாஸ்திரம்

குயிலுக்கங்கே விடிந்துவிட்டது
கூவியுரைக்குது ஊருக்கெல்லாம்
நீயில்லா எனக்கு மட்டும்
நீள்கிறது இந்த மாலை

கொசுவும் ஒரு தூக்கம் போட்டு
குருதிப்பசியுடன் பறக்குதிங்கே
நினைவில் நீயாட பறக்குதிங்கே
நேரக்கணக்கும் உறக்கமுமே

உடுக்களும் கண்சிமிட்டி ஓய்ந்து
ஒளியப்பார்க்குது வானில் எங்கோ
கண்மட்டும் வானை வெறிக்க
காணுது மனம் உன்னை மட்டும்

சூரியனும் தூக்கம் முடிந்து
சிவப்பாய் கீழே எழ
கண்ணிரண்டும் சிவந்து நானும்
களைத்து எழுந்தேன் உறங்காமல்

காதலலை மனசைத் தாக்க குலைந்து
காகிதத்தில் வடிக்க எண்ணி எழுதி
சரியா என்று படித்துப் பார்த்தால்
சாரல் மட்டும் தெளிச்சிருக்கு

மனதிலுள்ள உணர்ச்சி எல்லாம்
வாயால் சொல்ல முயற்சி செய்ய
ஓய்ந்தது வாய் சொச்சம் சொல்லி
ஒளிந்திருக்கு பனிப்பாறை மிச்சம் உள்ளே

பிரிந்திருக்கும் இந்த நேரம்
பாரமாகி அழுத்தும் மனம்
புரிய வைத்தது ஒரு நிஜம்
பூரணமாய் உள்ளே உள்ளாய்

யுகங்கள் பிரிந்தால் வருடங்கள்
வருடங்கள் பிரிந்தால் நாட்கள்
நாட்கள் பிரிந்தால் வினாடிகள்
நாம்பிரிந்தால் வினாடி யுகங்கள்

கோடைப் பெருமூச்சு

நிற்கும் மரமெல்லாம்
நீர்விழுது விட
அலையும் மேகமெல்லாம்
ஆனந்த நீர்சொரிய
கொடிசெடி மரமெல்லாம்
கோடை அழுக்கைக் கழுவி
புத்துணர்வு கொண்டு
புதுப் பச்சை இலைவிட
உடல் குளிருடன்
உள்ளம் தினவெடுத்து
கவிதை பலபாடிடும்
கார்கால நினைவுடன்
வாட்டும் கோடையின்
வெய்யில் அனலின்
வெப்பம் தாளாது
வியர்வையில் நனைந்தமேனி
பழம்நினைவினால் வந்த
பெருமூச்சால் காய்கிறது

சகோதரனே

சகோதரனே
துன்பத்தில் இருக்கலாம் நீ
சோகத்தில் மிதக்கலாம் நீ
துன்பத்தையும் சோகத்தையும்
நினைப்பதால் மட்டும்
நீங்கிடுமா அவை

அடியெடுத்து வைக்குமுன்னே
அவ்விடத்தை நீபார்
அடியெடுத்து வைத்தபின்னே
அடுத்த இடம் பார்

அடியெடுத்து வைத்தபின்னும்
அவ்விடத்தைப் பார்த்திருந்தால்
அடுத்த அடி எப்போது
அப்படியே நிற்பாயே

புதுகவிகளுள் சிலர்
புலம்பலையே சொத்தாக
பேணிவருதல் போல
பேதையாய் மாறிடாதே

கண்ணிலே நீர்வந்தால்
காண்பாயோ பாதையை
கடல்நீர் உப்பிருக்க
கண்ணீர் உப்பெதற்கு

கண்ணீர் இனிவேண்டா
கவலைகள் இனிவேண்டா
குன்றுகளைத் தகர்த்து
குழிகளை நிரப்பிடுவோம்

குழிகள் பலயிருக்க
குன்றுகள் எதற்கு
குன்றினுச்சியில் நின்று
குழிகளை எண்ணவோ

கனல்வார்த்தைகள் பல
காதில் விழுந்தால் போதுமா
குறட்டைவிடும் அறிவினை
கொளுத்தித்தான் பாரேன்

சுடர் விட்டெரியும்
சூடு எங்கும் பரவும்
சுறுசுறுப்பாய் புதுக்குருதி
சுருதியுடன் பாயும்

மூளைக்குள்ளே ஆயுதம்பல
முடங்கியதை அறிவாய்
மேகமென நீஎழுந்து
மேருவையே தகர்ப்பாய்

பழையதென்றும் புளிக்கும்
புதியதுதான் இனிக்கும்
பழையதை மறந்து
புதுவாழ்வு துவங்கிடு

என் பிரியமுள்ள எதிரிகளே

அன்புள்ள
மென்மையான இரக்கமற்றோரே
பிரியமுள்ள எதிரிகளே எனை
வெறுத்தொதுக்கும் நண்பர்களே

நான்
அனிச்சம் போன்றவன்
விருந்தினனாக இருக்கையில் மட்டுமல்ல
விருநதளிக்கையிலும் தன்

என்னிதய மலரை சிலர்
கொள்ளிகட்டையால் போசுக்குகின்றனர்
கொடுமைக்காரர்கள்
ஆனால்
நீங்கள் மென்மையானவராயிற்றே
அதனால் தான்
மணம் வீசும் ஊதுபத்தி
முனைகொண்டு முத்தமிடுகின்றீர்

நான் செல்லும் பாதை
காட்டுப்பாதை
பலர் என்பாதை முட்களை
கண்டும் காணாது போகின்றனர்
ஆனால்
நீங்கள் என் பிரியமுள்ளவராயிற்றே
அதனால் தான்
ரோஜா செடிஎடுத்து
மலரை பறித்துவிட்டு
மீதியை பாதையில் வீசுகின்றீர்

நான் போரிடும் களத்தில்
பலர் முன்னின்று குத்துகின்றனர்
வீர எதிரிகள்
ஆனால்
நீங்கள் என் நண்பராயிற்றே
அதனால் தான்
என்மார்பு வலிக்குமென்று
பின்னின்று குத்துகின்றீர்

நீங்கள் தந்த அனுபவங்களுக்கு
நன்றிகள் பலகோடி

புதன், 5 நவம்பர், 2008

கழுதையும் நானும் வேற்றுமை ௫

அந்தப்பெண் மேல் மோகம் வந்தால்
அந்தப்பெண்ணே அறியாவாறும் மறைப்பேன்

தமிழனும் தமிழும்

கபடநாடக நடிக துதிஇசை வித்வான்
பொய்யுரை பச்சை தமிழர் எத்தனை பேர்
சமயமற்ற தமிழ் படிப்பதன் பலனோ

குற்ற விரயம்

தமிழ் வாலிப வயோதிக அன்பர்கள் ஒருபுறம்
தெய்வமாக்கப்படும் தமிழ் பெண்கள் மறுபுறம்
மாநகர பேருந்தில் நிமிட ஈர பலாத்காரங்கள்

தேடல்

உன்னை அறிவதற்கு முன்பே தேவையால் தேடுறேன்
மனதாலும் செயலாலும் எத்தனை ஏற்பாடுகள்
நீயே என் கடவுள் ஆகி விடுவாயோ

முதலும் முடிவும் ஒன்றோ

கட்டிடங்கள் குடிசைகள் பாடசாலை சாலைகள்
முதல் போலவே முடிவும் தெரிய
மின்வண்டி நிலையங்கள் எல்லாம் ஒரேமாதிரிதான்

கழுதையும் நானும் ஒற்றுமை ௨

இன்னொரு கழுதை இறந்தா பக்கம் நின்று
அடுத்த வேலை வரும்வரை எண்ணம் பரப்பும்

கழுதையும் நானும் ஒற்றுமை ௧

என் குழந்தை அழும்போது
ஓடிச்சென்று பார்த்திடுவேன்

கழுதையும் நானும் வேற்றுமை ௪

பிள்ளை வெறுத்தாலும் நல்ல வரனென்று
தேடித்தேடி கட்டிவைத்தழிப்பேன்

துளி மரணம்

துளி விஷம் தரும் துளி மரணம்
மரணமும் நல்லனுபவம் என காட்டுதோ
வெளியில் இருந்து உள் செல்லும் போதை

நிலையாமை

சூரியனை பார்க்க முடியவில்லை என்னால்
சந்திரன் பார்க்க அழகு சொல்லவோ
மாறச்சொல்லி வறுப்பதும் ஏனோ

கிரகங்கள்

வான் கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் சூரிய குடும்பம்
எங்க கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் பெரிய குடும்பம்
ஒரு மேடையில் நின்றாலும் ஒவ்வொரு திசை பார்க்கும்

செதுக்கல்கள்

நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு

கொண்டு வந்ததை கொண்டு போ

நீ என் நண்பனா பகைவனா
கொண்டு வந்ததை கொண்டு போ
காற்றே அந்தமேகம் மறைக்குதென்நிலவை

கழுதையும் நானும் வேற்றுமை ௩

கடவுள் உணர்வு இல்லாவிடினும்
கடவுள் பற்றி மாய்வேன்

கழுதையும் நானும் வேற்றுமை ௨

வளர்ந்த பிள்ளையை மாற்றானாய்
எட்டி உதைக்க மாட்டேன்

செவ்வாய், 4 நவம்பர், 2008

கழுதையும் நானும் வேற்றுமை ௧

பணத்துக்குகாகவும் மனத்துக்காகவும்
மணிக்கணக்காய்இயற்கைக்கு எதிராயுழைப்பேன்

சனி, 1 நவம்பர், 2008

Mudhal Murayai

எத்தனை நாள் யோசித்திருந்தேன் ...
இத்தனை சுலபம் என அறியாது ...
நானும் blog எழுதுறேன் ...

மனதில் தோன்றியதை எழுதி ஒரு விதமாய் லேபல் ஒட்டி தருவேன்

கழுதை என்று திட்டு வாங்காத தமிழன், தமிழ்நாட்டில் வளர்ந்திருக்க முடியாது. அதனால் நான் மனிதனுக்கும், மிருகத்திற்கும் இடையே காணும் வேற்றுமை ஒற்றுமைகளை, கழுதையையும் என்னையும் ஒப்பிட்டு எழுதுவேன்.

Punctuation marks எதுவும் எந்த போஸ்டிலும் இருக்காது. அவரவர் தமிழறிவிற்கேற்ப குறிகளால் பிரியாத தமிழ் வார்த்தைகளை பலவாறு கோர்த்து விளையாடும் தமிழ்விளையாட்டு கெட்டுவிடும் என நினைக்கிறேன்.

போதனை எதுவும் இருக்காது (மாணவப் பருவத்தில் தோன்றியதைத்தவிர). என் அனுபவங்கள், கேள்விகள், வடுக்கள் போன்றவற்றை என்காட்டுத்தமிழ்தேன் தடவி பகிர்ந்து கொள்வேன். நீங்களும் தயவு செய்து உங்கள் பதில்களையும், எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்து தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது...
தமிழ் அதுவாய் வாழும்
முடிந்தால் தமிழால் வாழ்வோம்