சனி, 22 நவம்பர், 2008

சகோதரனே

சகோதரனே
துன்பத்தில் இருக்கலாம் நீ
சோகத்தில் மிதக்கலாம் நீ
துன்பத்தையும் சோகத்தையும்
நினைப்பதால் மட்டும்
நீங்கிடுமா அவை

அடியெடுத்து வைக்குமுன்னே
அவ்விடத்தை நீபார்
அடியெடுத்து வைத்தபின்னே
அடுத்த இடம் பார்

அடியெடுத்து வைத்தபின்னும்
அவ்விடத்தைப் பார்த்திருந்தால்
அடுத்த அடி எப்போது
அப்படியே நிற்பாயே

புதுகவிகளுள் சிலர்
புலம்பலையே சொத்தாக
பேணிவருதல் போல
பேதையாய் மாறிடாதே

கண்ணிலே நீர்வந்தால்
காண்பாயோ பாதையை
கடல்நீர் உப்பிருக்க
கண்ணீர் உப்பெதற்கு

கண்ணீர் இனிவேண்டா
கவலைகள் இனிவேண்டா
குன்றுகளைத் தகர்த்து
குழிகளை நிரப்பிடுவோம்

குழிகள் பலயிருக்க
குன்றுகள் எதற்கு
குன்றினுச்சியில் நின்று
குழிகளை எண்ணவோ

கனல்வார்த்தைகள் பல
காதில் விழுந்தால் போதுமா
குறட்டைவிடும் அறிவினை
கொளுத்தித்தான் பாரேன்

சுடர் விட்டெரியும்
சூடு எங்கும் பரவும்
சுறுசுறுப்பாய் புதுக்குருதி
சுருதியுடன் பாயும்

மூளைக்குள்ளே ஆயுதம்பல
முடங்கியதை அறிவாய்
மேகமென நீஎழுந்து
மேருவையே தகர்ப்பாய்

பழையதென்றும் புளிக்கும்
புதியதுதான் இனிக்கும்
பழையதை மறந்து
புதுவாழ்வு துவங்கிடு

1 கருத்து:

தமிழ்மணி சொன்னது…

நல்ல பா உங்களுடையது....