சனி, 22 நவம்பர், 2008

பிரிவு

கடனும் லாபமும் சேர்த்து வளரும்
கணக்கொன்று வாய்த்து நித்தம்
நானெழுதி மகிழ்கையில் இந்த
நரர்க்கெல்லாம் ஏன் வருத்தம்

மற்றக் கடனெல்லாம் தனித்தனியே
மனதைக் கலக்கையிலே உன்னிடம்
பட்டக் கடன் வானைத் தாண்டியும்
பெருமிதம் தருவது ஏன் நித்தம்

எழுதி எழுதி கூட்டிக் கழித்து
எண்களில் குழம்பி காண்பார் லாபத்தை
காகிதத்தில் எண்களில் அடங்கா கணக்கை
கண்டதும் லாபமென்றது ஏன் சித்தம்

மொத்த ஏன்களுக்கும்
முழுதும் ஒருபதில்
மச்சம் என்கிறது
மச்ச சாஸ்திரம்

குயிலுக்கங்கே விடிந்துவிட்டது
கூவியுரைக்குது ஊருக்கெல்லாம்
நீயில்லா எனக்கு மட்டும்
நீள்கிறது இந்த மாலை

கொசுவும் ஒரு தூக்கம் போட்டு
குருதிப்பசியுடன் பறக்குதிங்கே
நினைவில் நீயாட பறக்குதிங்கே
நேரக்கணக்கும் உறக்கமுமே

உடுக்களும் கண்சிமிட்டி ஓய்ந்து
ஒளியப்பார்க்குது வானில் எங்கோ
கண்மட்டும் வானை வெறிக்க
காணுது மனம் உன்னை மட்டும்

சூரியனும் தூக்கம் முடிந்து
சிவப்பாய் கீழே எழ
கண்ணிரண்டும் சிவந்து நானும்
களைத்து எழுந்தேன் உறங்காமல்

காதலலை மனசைத் தாக்க குலைந்து
காகிதத்தில் வடிக்க எண்ணி எழுதி
சரியா என்று படித்துப் பார்த்தால்
சாரல் மட்டும் தெளிச்சிருக்கு

மனதிலுள்ள உணர்ச்சி எல்லாம்
வாயால் சொல்ல முயற்சி செய்ய
ஓய்ந்தது வாய் சொச்சம் சொல்லி
ஒளிந்திருக்கு பனிப்பாறை மிச்சம் உள்ளே

பிரிந்திருக்கும் இந்த நேரம்
பாரமாகி அழுத்தும் மனம்
புரிய வைத்தது ஒரு நிஜம்
பூரணமாய் உள்ளே உள்ளாய்

யுகங்கள் பிரிந்தால் வருடங்கள்
வருடங்கள் பிரிந்தால் நாட்கள்
நாட்கள் பிரிந்தால் வினாடிகள்
நாம்பிரிந்தால் வினாடி யுகங்கள்

1 கருத்து:

தமிழ்மணி சொன்னது…

//குயிலுக்கங்கே விடிந்துவிட்டது
கூவியுரைக்குது ஊருக்கெல்லாம்
நீயில்லா எனக்கு மட்டும்
நீள்கிறது இந்த மாலை//

நீள்கிறது உங்கள் மேஜிக்.......