காத்திருப்பாய் என்று தெரியும் என் அழைப்பால்
பூத்திருப்பாய் என்று தெரியும் என் நினைப்பால்
மலர் கோர்த்து காத்திருப்பாய் நான் வந்து சூட
மலர் சேர்ந்து மெய்வளர்ந்தாய் நான் வந்து கூட
என்னால் அகம் முகம் மலரும் மலர் நீ
என்னை ஒளி தந்து வளர்த்தும் தழல் நீ
நிலவு வரும் நேரமாச்சு பதைக்கிறேன் நானே
உலகமெலாம் தடைசெய்தும் வருவேன் நானே
நிலைகுலைந்து நடந்திருந்தேன் வாழ்வு தாழ
தலைகுனிந்து காத்திருந்தேன் வாழ்வு வாழ
மனிதம் உதவாதென்று வெறுத்துப் போனேன்
புனிதம் காக்குமென்று நம்பிப் போனேன்
காத்து நின்றோம் அம்மன் கோவில் திரைவிலக
பூத்துநின்றாய் மாலையில் எனது தலைநிமிர
கண்பார்த்ததும் உன்பார்வை என் விருப்பமாக
கண்கள் சேர்ந்தன என் வாழ்வின் திருப்பமாக
உன்னை சேர்தலே முடிவென்று நினைத்திருந்தேன்
உன்னை சேர்தலே துவக்கமென்று பிறகுணர்ந்தேன்
உணர்வால் எனை நிமிர்த்தி நிற்க வைத்தாய்
உலகை நேராய் நீ எனை பார்க்க வைத்தாய்
உறவாலே எதிர்காலம் நிலைக்க வைத்தாய்
உறவிற்கு உழைத்திட நினைக்க வைத்தாய்
காத்திரு கண்ணே வந்து நிற்பேன் மனம் மகிழ
பார்த்திரு பெண்ணே உயர்ந்து நிற்பேன் மனம் நெகிழ
(தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - கொடுக்கப்பட்ட படத்திற்கு எழுதியது )